நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைவதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலினி அஜித்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். இதன் மூலம் அவர் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். மேலும், ‘விடாமுயற்சி’ படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் அஜித்துடன் இணைந்து பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 12-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நடிகர்கள் பிரபு, பார்த்திபன், சுனில் மற்றும் நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் சுமார் ரூ.250 கோடி வசூலித்ததாகக் கூறப்படும் இப்படத்தைத் தொடர்ந்து, அஜித் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், ‘டேர்டெவில்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் படப்பிடிப்பில் அஜித் களமிறங்க உள்ளார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


