Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நான் இல்லாமல் போனாலும் என் பாடல்கள் என்றும் வாழும்” – இளையராஜா

“My Songs Will Live Forever Even After I’m Gone” – Ilaiyaraaja

தமிழ் திரையுலகின் இசைச் சக்கரவர்த்தியான இளையராஜா, 1976ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு அரை நூற்றாண்டாக தனது இசையால் ரசிகர்களின் மனதை ஆட்கொண்ட அவர், தற்போது சினிமாவில் தனது 50வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

இந்த பொன்விழா தருணத்தில் தனது இசைப் பயணம் குறித்து மனம் திறந்த இளையராஜா, “வருடங்கள் மட்டும் மாறிக்கொண்டே செல்கின்றன. ஆனால் நான் அதேபோலவே இருக்கிறேன். பலர் என்னை இசைக் கடவுள் என்று அழைக்கிறார்கள். அது அவர்களின் அன்பும் பார்வையும் தான். கடவுளுக்கே தான் கடவுள் என்ற எண்ணம் இருக்குமா? அதுபோலத்தான் இதையும் நான் பார்க்கிறேன்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ரசிகர்கள் காட்டும் அன்பு அளவிட முடியாதது. கோவிலில் கற்பூர ஆரத்தி காட்டும் தருணத்திலும் மனம் அலைபாயும். ஆனால் ‘ஜனனி… ஜனனி…’ போன்ற பாடல்கள் அந்த மனதை அமைதிப்படுத்துகின்றன. அந்த ஆன்மிக அமைதியை என் இசை தருகிறது என்பதே எனக்கு மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் இல்லாமல் போனாலும் என் பாடல்கள் மக்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும். அந்த கொண்டாட்டம் ஒருபோதும் முடிவடையாது,” என உருக்கமாக கூறினார்.

அதேபோல், தனது இரண்டாவது சிம்பொனியும் விரைவில் வெளியாகும் என்றும் இளையராஜா அறிவித்துள்ளார்.