இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலைகளை பின்னணியாகக் கொண்டு, கணிக்க முடியாத இயற்கைச் சூழலில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
சிவராத்திரி நாளில், முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைச் சேர்ந்த நான்கு நபர்கள் எதிர்பாராத நிகழ்வுகளின் மூலம் ஒரு மர்மமான மற்றும் அசாதாரணமான சூழ்நிலைக்குள் சிக்கிக் கொள்வதை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
இந்தப் படத்தில் லிஜோமோல் ஜோஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சரவணன், பாவல் நவகீதன், நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் கீதா கைலாசம், பிரவீன் ராஜா, ராஜீவ் ஆனந்த், கணேசன் களியமூர்த்தி, ஜே.எஸ். கவி, ஸ்ரீதர், ஆதிரா, பொற்கொடி, அனுபமா உன்னி, ஹீனா ரத்தோர், ஸ்மிருதி உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளதுடன், பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் கவனித்துள்ளார். ஹரிஷ்னி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் பிரமாண்டமான ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது.
படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்தகட்ட புரமோஷன் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நெல்லை செழியன் தெரிவித்துள்ளார்.


