வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடம் தெரிவிக்க நினைக்கும் அவர், தனது தாய் அனுமோலை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அப்போது, தனது பெற்றோர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது அர்ச்சனாவுக்கு தெரிய வருகிறது.
இதனால் அதிர்ச்சியடையும் அர்ச்சனா, பெற்றோரின் பிரிவுக்கான காரணத்தை அறிந்து கொள்வதோடு, அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது காதலன் விஜய் விஸ்வாவுடன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு தனது தந்தையான டாக்டர் குரு சோமசுந்தரத்தை சந்தித்து, தாயைப் பிரிந்ததற்கான காரணத்தை கேட்கிறார்.
அவர் கூறும் தகவல் அர்ச்சனாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒருபுறம் பெற்றோரின் பிரிவுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை தெரிந்துகொள்ளும் அர்ச்சனா, மறுபுறம் அவர்களை மீண்டும் சேர்த்து வைக்க போராடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? பிரிந்து வாழும் பெற்றோர் மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பு எப்படி?
டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள குரு சோமசுந்தரம், தொழில்ரீதியான நெருக்கடிகளுக்கு இடையே பணிவதா, எதிர்த்து நிற்பதா எனத் தடுமாறும் தருணங்களை இயல்பான நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.
அநியாயத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனைவி கதாபாத்திரத்தில் அனுமோல், கதைக்கு தேவையான அழுத்தத்தை சிறப்பாக வழங்கியுள்ளார். அதேபோல், அர்ச்சனாவாக நடித்துள்ள அவர், பெற்றோரை மீண்டும் இணைக்க முயற்சிக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
காதலனாக வரும் விஜய் விஸ்வா, தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளார். சாய் விக்கி, நயனா சாய், பிபின் குமார் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
தொழில்நுட்பம் எப்படி?
கே-வின் இசை, படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கும் திரில்லர் தருணங்களுக்கும் பொருத்தமாக பயணிக்கிறது. சதீஷ் ஜி-யின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அழகு சேர்ப்பதோடு, கதையின் மனநிலைக்கு ஏற்ற வகையில் காட்சிகளை பதிவு செய்துள்ளது.
குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் திரில்லர் அம்சங்களையும் இணைத்து சொல்ல முயற்சித்திருக்கிறது ‘பாரிஸ் கபே’.

