Tamilstar
Movie Reviews

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரை விமர்சனம்

Dont Trouble The Trouble Movie review

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல் மன்னன் அஸ்லாம் (மகேஷ் மஞ்ச்ரேக்கர்) உடன் ஏற்படும் பிரச்சினையால், மூன்று நாட்களுக்குள் ரூ.25 லட்சம் பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறார்.

பணத்தை சம்பாதிக்க பகத் பாசில் எடுக்கும் சில தவறான முடிவுகள், எதிர்பாராத விதமாக அவரை ஒரு மாய உலகத்திற்குள் அழைத்துச் செல்கின்றன. அங்கு அவருக்கு ஒரு மாயாஜால லாக்கெட் கிடைக்கிறது. அதிலிருந்து பேபி சாரா என்ற சிறுமி வெளிவருகிறாள். அந்தச் சிறுமி பகத் பாசிலுக்கு மட்டுமே தெரிகிறாள். காணாமல் போன தனது பெற்றோரை கண்டுபிடித்துத் தருமாறு அவள் அவரிடம் கேட்கிறாள்.

இதையடுத்து, சிறுமியின் மாய சக்தியைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க பகத் பாசில் முயற்சிப்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான கதையாக விரிகிறது.

பகத் பாசில் வழக்கம்போல தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரத்தின் அவசரம், குழப்பம், பேராசை, பின்னர் சிறுமி மீது உருவாகும் பாசம் என ஒவ்வொரு உணர்வையும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

பேபி சாராவாக நடித்துள்ள திவ்யா, மாயாஜால காட்சிகளிலும் தனது நடிப்பிலும் தனி கவனம் ஈர்க்கிறார். சில காட்சிகளில் பகத் பாசிலையே மிஞ்சும் வகையில் திரையை ஆக்கிரமிக்கும் அவர், குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மகேஷ் மஞ்ச்ரேக்கர், போலீஸ் அதிகாரியாக வரும் சுப்பராஜு, பகத் பாசிலின் நண்பராக நடித்துள்ள வெங்கடேஷ் ககுமானு ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர்.

இயக்குநர் ஷசாங்க், மாயாஜாலத்தையும் மனித உணர்வுகளையும் இணைத்து வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதையின் வேகம் சற்று குறைந்தாலும், ஹீரோ மற்றும் சிறுமிக்கு இடையே உருவாகும் உறவை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

மாயாஜாலம், காமெடி, சென்டிமென்ட் என பல அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பகத் பாசில் மற்றும் சிறுமிக்கு இடையே உருவாகும் பாசமும் உறவும்தான் படத்தின் முக்கிய பலமாக உள்ளது.

கால பைரவாவின் இசை பெரிய அளவில் மனதில் பதியவில்லை என்றாலும், சில காட்சிகளில் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கிறது. கேமரா ஒர்க் படத்தின் மற்றொரு பலமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், வழக்கமான கதைக்களத்திலிருந்து விலகி மாயாஜாலம், காமெடி மற்றும் சென்டிமென்ட் கலவையில் உருவாகியிருக்கும் ஒரு வித்தியாசமான படமாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ அமைந்துள்ளது.