பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு மலைப்பகுதியில் சொந்தமாக ஹோம் ஸ்டே ஒன்றை தொடங்கி, கணவருடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே அவரது கனவு.
இந்தக் கனவை நனவாக்க அசோக் செல்வனும் ப்ரீத்தி முகுந்தனும் தனியார் நிறுவனத்தில் இரவு பகலாக உழைக்கின்றனர். தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை உடனடியாக வாழ முடியாமல் தவித்தாலும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை மட்டும் இருவரும் கைவிடவில்லை. ஒரு கட்டத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள ரேவதியின் பழைய பங்களாவை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வாங்குகின்றனர்.
தங்களது கனவு நனவாகிவிட்ட மகிழ்ச்சியில் இருக்கும் தம்பதிக்கு, அப்பகுதி எம்.எல்.ஏ.வும் உள்ளூர் தாதாவாக வலம் வருபவருமான கதிர் பாலுவால் பிரச்சனை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனைகளை எதிர்கொண்டு தாங்கள் கனவு கண்ட வாழ்க்கையை அசோக் செல்வனும் ப்ரீத்தி முகுந்தனும் அடைந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
‘மனைவியின் கனவை நிறைவேற்ற வேண்டும்’ என்ற எளிமையான மற்றும் அழகான மையக்கருவை வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆர். கார்த்திகேயன். தனது உலகமே மனைவிதான் என்ற உணர்வை அசோக் செல்வன் தனது கதாபாத்திரத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, 70 அடி உயரத்திலிருந்து அசோக் செல்வன் நிஜமாகவே குதிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. காதலுக்காக பெற்றோரை விட்டு வந்து, தான் கனவு கண்ட வாழ்க்கைக்காக கணவருடன் இணைந்து போராடும் பெண்ணாக ப்ரீத்தி முகுந்தன் சிறப்பாக நடித்துள்ளார்.
எம்.எல்.ஏ. கதாபாத்திரத்தில் கதிர் பாலு, இன்ஸ்பெக்டராக மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக சாபுமோன் அப்துல் சமது, ராணியாக ரேவதி உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
கோவிந்த் வசந்தாவின் இசை, காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. கௌதமின் ஒளிப்பதிவு மலைப்பகுதியின் இயற்கை அழகையும், கதையின் பதற்றமான தருணங்களையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது.
கிளைமாக்ஸில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தாலும், அவற்றின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமாக அமைந்திருக்கும்.
காதலுக்காக பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பெண்; அவளது கனவையே தனது கனவாக ஏற்றுக்கொண்டு போராடும் கணவன் – இந்த இருவரின் அன்பையும் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் காதல் கதையே ‘அன்பில் அவன்’.

