சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான இயக்குநர் தேர்வில் பல மாற்றங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
முதலில் இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது. பின்னர் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பெயரும் அடிபட்டது. ஆனால் இருவரும் இந்தத் திட்டத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, ‘தலைவர் 173’ படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், ரஜினிகாந்துடன் மிஸ்கின் முதன்முறையாக இணையும் திரைப்படமாகவும், ‘டிராகன்’ படத்திற்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்துவுடன் அவர் மீண்டும் பணியாற்றும் இரண்டாவது படமாகவும் ‘தலைவர் 173’ அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

