ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யை ஆர்ஜே பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன்பின், விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஆர்ஜே பாலாஜி, “கருப்பு திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் விஜய் சார்” என பதிவிட்டார். இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, படத்தின் நாயகனான சூர்யாவுக்கு உரிய முக்கியத்துவம் வழங்காமல் விஜய்யை முன்னிறுத்துவதாக சிலர் விமர்சித்தனர்.
இந்த விவகாரம் குறித்து அண்மையில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் ஆர்ஜே பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய்யை மனதில் வைத்து ஒரு பிரம்மாண்டமான கதையை எழுதியிருந்ததாக தெரிவித்தார். ஆனால் இருவரின் கால்ஷீட் மற்றும் சூழ்நிலை காரணங்களால் அந்தத் திட்டம் முன்னேறவில்லை என்றும் கூறினார்.
எனினும், அந்தக் கதையை விஜய்யிடம் கூறியிருந்த தகவல் மூலமாகவே ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தினர் தன்னை அணுகியதாகவும், “விஜய் சாரிடம் சொன்ன கதையை எங்களுக்கும் சொல்ல முடியுமா?” என்று கேட்டதன் மூலம் சூர்யாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “கருப்பு படத்தை உருவாக்கியதும், அதற்கு உயிர் கொடுத்ததும் சூர்யா சார் தான். இன்று நான் பெறும் இந்த அன்புக்கும், என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்திற்கும் முழுக் காரணம் அவர்தான். ஆனால் அந்தப் பயணத்தின் முதல் கதவு திறக்க காரணமானவர் விஜய் சார். அதனால்தான் அவரைச் சந்தித்து நன்றி தெரிவித்தேன்” என்று ஆர்ஜே பாலாஜி கூறினார்.
அதேபோல், ‘கருப்பு’ திரைப்படத்தின் பூஜை மாசாணியம்மன் கோயிலில் தொடங்கியதால், படம் வெற்றி பெற்ற பிறகு விஜய்யை நேரில் சந்தித்து நன்றி கூறினால் மட்டுமே அந்தப் பயணம் முழுமை பெறும் என்ற உணர்வு தனக்கிருந்ததாகவும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது விஜய், படத்தின் கதையையும் வெற்றியையும் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

