டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் ஜூலை 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டைட்டில், டீசரைத் தொடர்ந்து நேற்று வெளியான டிரெய்லரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மறைந்த நடிகர் முரளியின் புகழ்பெற்ற திரைப்பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ள இந்த படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ்., ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளைஞர்களை மையமாகக் கொண்ட காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் அட்லீ, தனது சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசினார்.
அவர் கூறியதாவது:
“‘ராஜா ராணி’க்குப் பிறகு என்னால் ஒரு முழுமையான காதல் படம் இயக்க முடியவில்லை. நான் எங்கு சென்றாலும் முதலில் மக்கள் பேசுவது ‘ராஜா ராணி’ பற்றிதான். ஆனால் அதற்குப் பிறகு தளபதியுடன் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற பெரிய படங்கள் வந்ததால், காதல் படங்கள் இயக்கும் வாய்ப்பு தள்ளிப்போய்விட்டது.
அதனால் இருந்த ஏக்கத்தில்தான் ‘இதயம் முரளி’ படத்தை நான் தயாரிக்க நினைத்தேன். இது இயக்குநர் ஆகாஷின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை. அந்த படத்தில் வரும் ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் நான்தான் என்று நினைத்துக்கொள்ளலாம்.
கயாடு லோஹர் வேற லெவலில் இருக்கிறார். அவர் விரைவில் தேசிய அளவில் அனைவரும் விரும்பும் ‘நேஷனல் கிரஷ்’ ஆக மாறுவார் என்று நம்புகிறேன். மேலும், பரிதாபங்கள் சுதாகரின் மிகப்பெரிய ரசிகன் நான்தான்,” என்று அட்லீ கூறினார்.

