தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய நினைவுகள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ’16 வயதினிலே’ திரைப்படப் படப்பிடிப்பில் நடந்த ஒரு அரிய சம்பவத்தை கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.
பாரதிராஜாவின் இயக்குநர் அறிமுகப் படமான ’16 வயதினிலே’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்தில் பாக்யராஜ் துணை இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
வைரமுத்து தனது பதிவில் கூறியதாவது:
“’16 வயதினிலே’ படப்பிடிப்பு. சப்பாணியை அடித்த பரட்டையை ஸ்ரீதேவி திட்டிவிட்டு, இறுதியில் ரஜினியின் முகத்தில் காறித் துப்ப வேண்டிய காட்சி. அதற்காக சோப்பு நுரையைப் பயன்படுத்தி பலமுறை முயன்றும், அது இயல்பாக அமையவில்லை.
அப்போது, ‘உண்மையாகவே காறித் துப்புங்கள்’ என்று ரஜினி கூறினார். ஆனால் ஸ்ரீதேவி அதற்கு மறுத்து, ‘என்னால் முடியாது’ என்று விலகிச் சென்றார்.
உடனே ரஜினி, ‘காட்சி உயிரோட்டமாக வர வேண்டும்; நீங்களே துப்புங்கள்’ என்று பாரதிராஜாவிடம் கூறினார். முதலில் தயங்கிய பாரதிராஜா, பின்னர் ரஜினியின் முகத்தில் உண்மையாகவே காறித் துப்பினார். அந்தக் காட்சி திரையில் மிகவும் இயல்பாகவும், தாக்கத்துடனும் பதிவானது.
காட்சி முடிந்தவுடன், பாரதிராஜா ரஜினியை கட்டிப்பிடித்து, கைக்குட்டையால் அவரது முகத்தைத் துடைத்தபடியே கண்கலங்கினார்.
இந்த நிகழ்வை அருகில் இருந்து பார்த்தவர் பாக்யராஜ். அவரது சுயசரிதைக்கு நான் எழுதிய முன்னுரையிலும் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ‘நடிப்பு என்பது வெறும் நடிப்பல்ல; அது முழுமையான அர்ப்பணிப்பு’ என்பதற்கான சிறந்த உதாரணம் இதுதான்,” என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

