‘டிராகன்’ திரைப்படம் மற்றும் ‘பவள மல்லி’ மியூசிக் ஆல்பம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை கயாடு லோஹர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகி, தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் அவரது அடுத்த 7 முக்கிய படங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவரது அடுத்த வரவாக ஜூலை 10 அன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் ‘இதயம் முரளி’ திரைப்படம் வெளியாகிறது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அதர்வா, ஃபஹத் பாசில், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோருடன் கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்டகால காதலின் வலியை பேசும் அழுத்தமான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 23 அன்று ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இம்மார்டல்’ திரைப்படம் வெளியாக உள்ளது.
மலையாளத்தில் ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் ‘ஐ ஆம் கேம்’ படத்தில் கயாடு லோஹர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அடுத்த நாளே, அதாவது ஆகஸ்ட் 21, அவரது தெலுங்கு படம் ‘தி பாரடைஸ்’ வெளியாகிறது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, மோகன் பாபு நடிக்கும் இந்த பீரியட் டிராமாவில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில் மேலும் இரண்டு பெரிய படங்களிலும் அவர் இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தில் பிரியங்கா மோகனுடன் இணைந்து கயாடு லோஹர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘சூர்யா 48’ திரைப்படத்திலும் அவர் நடிக்கிறார். டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இப்படம், ‘ஜெய் பீம்’க்குப் பிறகு அவர்களின் இரண்டாவது கூட்டணியாகும். ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இதுமட்டுமல்லாமல், மலையாளத்தில் வினய் கோவிந்த் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘தாரம்’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது.
இவ்வாறு மூன்று மொழிகளிலும் டாப் நடிகர்களுடன் தொடர்ச்சியாக இணைந்து நடித்து வரும் கயாடு லோஹர், தென்னிந்திய சினிமாவின் அடுத்த தலைமுறை முன்னணி நடிகையாக வேகமாக உருவெடுத்து வருகிறார்.

