72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து தனுஷ் விருதுகளை பெற்றார். அவர் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இதன்மூலம் இயக்குநராக தனுஷ் பெறும் முதல் தேசிய விருது இதுவாகும்.
மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக அவருக்கு சிறப்பு குறிப்பிடல் விருதும் வழங்கப்பட்டது. ஒரே விழாவில் இயக்குநராகவும் நடிகராகவும் தனுஷ் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
விழாவிற்கு தனுஷ் வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து பாரம்பரிய தோற்றத்தில் வந்திருந்த நிலையில், அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கருப்பு நிற ஃபார்மல் சூட் அணிந்து கம்பீரமாக காட்சியளித்தனர். தனுஷ் விருது பெற்ற தருணத்தை இருவரும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து பெருமையுடன் கண்டுகளித்தனர்.
விழாவுக்குப் பின்னர் மகன்களுடன் எடுத்த புகைப்படங்களை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் பதிவில், “உங்களுடைய முக்கியத்துவத்தையும் கவனத்தையும் வேறு ஒருவர் கவரும் போது, அதில் உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால்…” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தன் மீது தொடர்ந்து அன்பு காட்டி வரும் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளையும், ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ படங்களுக்காக தயாரிப்பாளராக தேசிய விருதுகளையும் பெற்றுள்ள தனுஷ், தற்போது நடிகர் மற்றும் இயக்குநராகவும் தேசிய விருதுகளை வென்று தனது திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

