பிரபல நடிகைகளான அம்பிகாவும், ராதாவும் உடன்பிறந்த சகோதரிகள். சொத்து மற்றும் பண விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், ராதா அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது காசோலைகளை திருடி, ரூ.46 கோடி மோசடி செய்ய அம்பிகா முயன்றதாக ராதா புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை அம்பிகா இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராக உள்ளார்.
இதற்கிடையே, அம்பிகா ஏற்கனவே ராதா மீது அளித்திருந்த புகாரும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் நிலுவையில் உள்ளது. அந்தப் புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராதாவுக்கு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், மூட்டு வலி இருப்பதால் திங்கட்கிழமை ஆஜராக உள்ளதாக ராதா தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ராதா அளித்த ரூ.46 கோடி மோசடி முயற்சி புகார் குறித்து அம்பிகா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:
“ராதா தான் எனக்கு காசோலைகளை வழங்கினார். அவற்றை வங்கியில் நிறுத்தியதும் ராதாதான். போரூர் ஏ.ஆர்.எஸ். கார்டன் யாருக்கு சொந்தம் என்பதில்தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த கார்டன் உருவாக நான் முக்கிய காரணமாக இருந்தேன். ஆனால், எனது சொத்தில் இருந்து எனது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
என் பெயரில் இருந்த ஏராளமான தங்க நகைகளும் ராதாவிடம் உள்ளன. தங்கம் மீது ராதாவுக்கு அதிக விருப்பம் உள்ளது. கையெழுத்திட்ட காசோலையை ராதா எனது வீட்டில் ஏன் வைத்திருக்க வேண்டும்? எனது வீட்டில் இருக்கும் காசோலையை நான் எப்படி திருட முடியும்?
காசோலையை கொடுத்தது ராதா, அதை நிறுத்தியதும் ராதா. ஆனால், அதனால் ஏற்பட்ட பாதிப்பு எனக்குத்தான். அவர் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனதால் நஷ்டமும் எனக்குத்தான் ஏற்பட்டது.
நான் உண்மையை கூறினால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும். ராதாவின் மகள் திருமணத்தில் கூட நான் வேலைக்காரி போல இருந்தேன். ராதா கையெழுத்திட்ட காசோலை எனது வீட்டிற்கு எப்படி வந்தது?
சொத்துகளை பிரித்துக் கொண்டபோது ராதா எனக்கு 5 காசோலைகளை வழங்கினார். ராதா தரப்பில் இருந்து எனக்கு ரூ.97 கோடி வர வேண்டியுள்ளது. ஏ.ஆர்.எஸ். கார்டன் பார்ட்னர்ஷிப்பிலும் எனக்கு பங்கு உள்ளது. ராதாவின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடி வரை இருக்கும்” என்று அம்பிகா தெரிவித்தார்.

