Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

Bhavana Shares Funny Thailand Story with Jayaram

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, ‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ படப்பிடிப்பின் போது நடந்த மறக்க முடியாத அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது: “ஜெயராமுடன் ‘ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. அவருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட நடிகர்களில் ஜெயராமும் ஒருவர்.

படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த ஓய்வு நேரத்தில், வேடிக்கையாக பிச்சை எடுத்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். இருவரும் ஒரு இடத்தில் தரையில் அமர்ந்து, கையில் கிடைத்த பொருளை இசைக்கருவி போல பயன்படுத்தி பாட ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் யாரும் கவனிக்கவில்லை. பிறகு நான் நடனமாடினேன், ஜெயராம் பாடினார். பின்னர் அவர் நடனமாட, நான் இணைந்தேன். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் எங்களிடம் பணம் கொடுக்கத் தொடங்கினர்.

அப்போது படப்பிடிப்புக்கான ‘ஷாட்’ ரெடியாகிவிட்டதால் நிறுத்த வேண்டியிருந்தது. அந்த சிறிய நேரத்தில் ரூ.100 மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. அந்த பணத்தை அனைவரிடமும் காட்டி, ‘இது எங்கள் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணம்’ என்று பெருமையாகச் சொன்னோம்.

நாங்கள் பிச்சை எடுக்கும் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து, பின்னர் படத்தின் இறுதிக் காட்சியிலும் சேர்த்திருந்தார்கள்,” என்று பாவனா தெரிவித்தார்.

பாவனாவின் இந்த நகைச்சுவையான அனுபவப் பகிர்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.