சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
குடும்பப் புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த குஷ்பு, “நானும் என் கணவர் சுந்தர் சி-யும் எங்கள் மகள்களை நல்ல ஒழுக்கத்துடனும் சுயமரியாதையுடனும் வளர்த்துள்ளோம். அவர்கள் எங்களின் பிரபலத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்தியதில்லை. நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தமல்ல,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “வியூஸ், ஃபாலோயர்கள் மற்றும் மலிவான பிரபலத்திற்காக பிரபலங்களின் குடும்பத்தினரை, குறிப்பாக பெண்களை குறிவைக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு எனது கடும் கண்டனம். ஒரு தாயிடம் விளையாடாதீர்கள். தன் குட்டிகளை காக்கும் காயம்பட்ட புலியாக நான் இருக்கிறேன். இனி இதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்,” என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு ஆதரவாக நடிகை ராதிகா சரத்குமார், “கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களை அவமானப்படுத்தும் உரிமம் அல்ல. நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரின் குடும்பத்தையோ, குறிப்பாக குழந்தைகளையோ கேலி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு பெண்ணின் மகள்களை இழிவுபடுத்துவது நகைச்சுவை அல்ல; அது கோழைத்தனம். நான் குஷ்புவுக்கும் அவரது மகள்களுக்கும் உறுதுணையாக நிற்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ராதிகாவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த குஷ்பு, அவரை தனது குடும்பத்தின் ஒரு அங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, குஷ்புவின் இளைய மகள் ஆனந்திதா சுந்தர், சிறுவயது முதல் இணைய வழி ட்ரோல்களை எதிர்கொண்ட அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். குறிப்பாக, தன்னை திருநங்கையுடன் ஒப்பிட்டு கேலி செய்வது தனக்கு வேதனை அளிப்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் இன்னும் நிலவும் பாரபட்ச மனநிலையையும் வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறியிருந்தார்.
23 வயதான ஆனந்திதா, ‘பொன்னியின் செல்வன் 2’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், ‘டபுள் ஆக்குபென்சி’ வெப் தொடரில் கிரியேட்டிவ் புரொடியூசராக அறிமுகமான அவர், தற்போது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ படத்திலும் பணியாற்றி வருகிறார்.
இணையத்தில் எல்லை மீறும் ட்ரோல்களுக்கு எதிராக குஷ்புவும் ராதிகாவும் எடுத்துள்ள இந்த உறுதியான நிலைப்பாட்டுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

