நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் பாராட்டியதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் 2022-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கட்டா குஸ்தி’ படத்தின் தொடர்ச்சியாக உருவான ‘கட்டா குஸ்தி 2’, கடந்த ஜூலை 3 அன்று திரையரங்குகளில் வெளியானது. இதில் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். முதல் பாகத்தில் இடம்பெற்ற கருணாஸ், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியான நாள் முதல் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், 10 நாட்களில் ரூ.44 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம், விஷ்ணு விஷாலின் முந்தைய வெற்றிப்படமான ‘ராட்சசன்’ படத்தின் வசூல் சாதனையையும் இப்படம் கடந்துள்ளது.
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷாலுக்கு பிஎம்டபிள்யூ சொகுசு கார், இயக்குநர் செல்லா அய்யாவுக்கு 10 சவரன் தங்கச் சங்கிலி ஆகியவற்றை பரிசாக வழங்கினார். நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட படக்குழுவினருக்கும் 40 கிராம் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகளை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “செம்ம படம்… ரொம்ப ஜாலியான என்டர்டெய்னர். இந்த மாதிரி படங்கள் இப்போது அதிகமாக வருவதில்லை. எல்லோரும் அருமையாக நடித்திருக்கிறீர்கள். குட்டி சாரா அசத்தலாக நடித்திருக்கிறார். உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு விஷ்ணு… தொடர்ந்து நல்ல படங்களை கொடுங்கள்,” என்று ரஜினிகாந்த் பாராட்டியதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இந்த பாராட்டு, ‘கட்டா குஸ்தி 2’ படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
“Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla… pic.twitter.com/rFGl4y4gvk
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) July 14, 2026

