Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

Hiphop Tamizha Aadhi's Meesaya Murukku 2 to Release in September

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017-ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமான ஆதி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தொடர்ச்சியான ‘மீசைய முறுக்கு 2’ படத்தை உருவாக்கி வருகிறார்.

சினிமா வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில், விரைவில் முழு ஷூட்டிங்கும் நிறைவடையும் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாதபோதிலும், படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 1980-களையும் தற்போதைய காலகட்டத்தையும் இணைக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அதில், இந்திய பாரம்பரிய இசை குறித்த பழமைவாத சிந்தனைகளை எதிர்த்து நிற்கும் இளம் இசைக் கலைஞராக அவர் நடித்திருப்பது படத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்கள் அனைத்தையும் ஹிப்ஹாப் ஆதியே கவனித்துள்ளார்.

சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், கெத்திகா சர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள நிலையில், நாசர், ஆடுகளம் நரேன், கருணாஸ், ஷா ரா, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ‘பப்பாளி பழமே’ மற்றும் ‘ஆரா 10/10’ பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததும், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.