Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

Atlee Praises cm Vijay

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா அட்லீ மற்றும் ஸ்டார் ஸ்டூடியோ 18 இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையொட்டி சென்னையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் அட்லீ பேசியதாவது:

“ஊர் வாயை அடைக்க முடியாது. ஊர் ஆயிரம் பேசும். மற்றவர்கள் பேசுவதை நம்பி நாம் வாழ்வது முட்டாள்தனம். யார் என்ன சொன்னாலும் அதை கேட்காதீர்கள். உங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து செல்லுங்கள். வழியில் சின்னச் சின்ன தடைகள் வரத்தான் செய்யும்.

சமூக வலைதளங்களில் ஒருவர் மற்றொருவரை பற்றி பேசுகிறார் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். சொல்ல வேண்டியது இருந்தால் நேரடியாக சொல்லிவிட்டு செல்லலாம்.

அரசியலில் அடுத்த தலைமுறையினர் வலுவாக இருப்பார்கள். அதற்கு ஒரே காரணம் விஜய் அண்ணன். நான் அரசியல்வாதியும் அல்ல; அரசியல் பேசுவதும் இல்லை. எனது முந்தைய தலைமுறையையும் பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது 5 வயது குழந்தைகள் கூட காலையில் இருந்து சட்டப்பேரவை நேரலையை உட்கார்ந்து பார்க்கிறார்கள்.

வலுவான தலைமுறையினரை விஜய் அண்ணா உருவாக்கியுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. முன்பு அரசியல் என்பது நல்லதல்ல, சரியாக வராது என்று கூறுவார்கள். ஆனால், அந்த நிலை மாறியுள்ளது. அரசியல் நமக்கானது. அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம், எப்படி பார்க்கிறோம் என்பது நமது பார்வையைப் பொறுத்தது” என்றார்.

இந்நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது விஜய் குறித்து அட்லீ பேசியுள்ள கருத்துகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.