Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோவாவில் புருஷன் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து

Actor Vishal Injured in Accident During Purushan Shoot in Goa

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும் முக்கியமான சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் நடித்தபோது, எதிர்பாராத விதமாக விஷாலுக்கு முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவில், காயம் குணமடைய குறைந்தது 3 வாரங்கள் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், இன்று நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முக்கியமான ஆண்டறிக்கை மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஷால் நேரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை பல ஆபத்தான சண்டைக்காட்சிகளில் நடித்திருந்தாலும், இந்தச் சம்பவம் எதிர்பாராத விபத்து என குறிப்பிட்டுள்ளார். மேலும், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக முக்கியமான பொதுக்குழு கூட்டத்தில் நேரில் கலந்துகொள்ள முடியாதது வருத்தமளிப்பதாகவும், நேரில் பங்கேற்க முடியாவிட்டாலும் தனது எண்ணங்களும் சிந்தனைகளும் கூட்டத்துடனும், அதில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுடனும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விஷால் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் இணைய வேண்டும் என ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.