Tamilstar
Movie Reviews

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

meesaya murukku 2 movie review

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில் கானா பாடல்களை பாடி சாதிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடைகின்றன. இதே கனவை அவரது மகனும் தொடர்ந்து, இசைத்துறையில் சாதிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரது முயற்சியும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

இதையடுத்து மூன்றாவது தலைமுறையாக கானா இசையை உலகறியச் செய்யும் போராட்டத்தை ஹிப்ஹாப் ஆதி முன்னெடுக்கிறார். தனது தாத்தா மற்றும் தந்தையின் கனவை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? கானா இசையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிப்பு

ஹிப்ஹாப் ஆதி வழக்கமான பாணியில் தனது ‘அட்வைஸ்’ வசனங்களால் ரசிகர்களை ரசிக்க வைப்பதோடு, ஆட்டம், பாட்டம் என படம் முழுவதும் உற்சாகமான என்டர்டெயின்மென்ட்டை வழங்கியுள்ளார்.

சென்னை கானா இசைக்காக அவர் முன்னெடுக்கும் போராட்டங்களும், அதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும் கவனம் பெறுகின்றன. குறிப்பாக வடசென்னை பின்னணியையும், அங்குள்ள இசைக் கலாசாரத்தையும் திரையில் கொண்டுவந்த விதம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

சைத்ரா ஆர்ச்சார், கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என வெவ்வேறு காலகட்டங்களில் இடம்பெறும் மூன்று கதாநாயகிகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர். கெட்டிகா சர்மாவின் நடனம் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது. சைத்ராவின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. ரம்யா ரங்கநாதனின் சிரிப்பும் ரசிகர்களை கவர்கிறது.

ஆதியின் நண்பராக நடித்துள்ள ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், சாரா, கருணாகரன் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இயக்கம்

முதல் பாகத்தின் மையக்கருவை தொடர்ந்துகொண்டே, அதனுடன் புரட்சிகரமான கருத்துகளையும் இணைத்து இளைஞர்களுக்கான விறுவிறுப்பான படைப்பாக உருவாக்கியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி.

நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள், நடனம், காமெடி, கருத்துகள் என பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை நகர்த்தியுள்ளார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள் கொண்டாட்டமாக அமைந்துள்ளன.

தொழில்நுட்பம்

பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது. சென்னை மற்றும் கானா இசை சார்ந்த காட்சிகளை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஹிப்ஹாப் ஆதியின் இசை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் உள்ளன. குறிப்பாக ‘ஆரா பத்துக்கு பத்து…’ பாடல் கொண்டாட்டத்தின் உச்சமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், கானா இசை, இளைஞர்களுக்கான கருத்துகள், பாடல், நடனம் மற்றும் கொண்டாட்டம் என பொழுதுபோக்கு அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டுள்ள ‘மீசைய முறுக்கு 2’, ஹிப்ஹாப் ஆதி ரசிகர்களுக்கு உற்சாகமான விருந்தாக அமைந்துள்ளது.