Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆஸ்கர் பட்டியலில் ‘ராமாயணா’.. முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!

Ramayana Makes It to the Oscars Top 20 VFX Shortlist

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) பிரிவின் முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பிடித்து இந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’, ‘ட்யூன்: பார்ட் 3’, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’, ‘ஜுமாஞ்சி: ஓபன் வேர்ல்ட்’, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘டிஸ்க்ளோஷர் டே’, ‘ப்ராஜெக்ட் ஹெயில் மேரி’, ஜப்பானின் ‘காட்ஸில்லா மைனஸ் ஜீரோ’ உள்ளிட்ட உலக அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுடன் ‘ராமாயணா’வும் ஆஸ்கர் களத்தில் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் ஆகியோர் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ரா மற்றும் யஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் சர்வதேச விநியோகத்தை சோனி பிக்சர்ஸ் மேற்கொள்கிறது. பிரம்மாண்ட புராணக் கதையை திரையில் காட்சிப்படுத்துவதற்காக, எட்டு முறை ஆஸ்கர் விருது வென்ற விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனமான டிஎன்இஜி (DNEG) மற்றும் ரீடிஃபைன் (ReDefine) ஆகிய நிறுவனங்கள் இணைந்து பணியாற்றியுள்ளன.

விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் டான் கிளாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இப்படத்தின் காட்சியமைப்புகளுக்கு பின்னணியாக அமைந்துள்ளது.

ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடிப்பதற்கு முன்பே, அடுத்த ஆண்டுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகளில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த ஸ்டண்ட் வடிவமைப்பு ஆகிய இரு பிரிவுகளிலும் ‘ராமாயணா’ குறுகிய பட்டியலில் இடம்பெற்று கவனம் ஈர்த்தது.

இதற்கு முன்பு 95-வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவின் முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் ‘ராமாயணா’வும் இணைந்துள்ளது.

இருப்பினும், முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பெறுவது இறுதிப் பரிந்துரையை உறுதி செய்யாது. டிசம்பர் 7 முதல் 11 வரை நடைபெறும் ஆரம்பகட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, டிசம்பர் 15 அன்று 10 படங்கள் கொண்ட குறுகிய பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர், ஜனவரி 21 அன்று இறுதி 5 பரிந்துரைகள் அறிவிக்கப்படவுள்ளன. 2027-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா மார்ச் 14 அன்று நடைபெற உள்ளது.