தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து இணைந்து பிஸியாகி வருகிறார்.
முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் அதர்வா மற்றும் பிரபுதேவா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதர்வா தற்போது ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் அவர், அதன் பிறகு இயக்குநர் ஹரி இயக்கும் புதிய கமர்ஷியல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை Stone Bench Productions நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இதற்கிடையில், திருவண்ணாமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் கோவிலுக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தனது மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் அவரைக் கண்ட ரசிகர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ், ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான அவரது ‘ரெட்ரோ’ திரைப்படமும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
அடுத்தடுத்து கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ஹரி போன்ற மாஸ் இயக்குநர்களுடன் அதர்வா கைகோர்ப்பதால், அவரது திரைப்பயணத்தில் இது முக்கியமான கட்டமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

