ராஜ் நிடிமோருவின் கதையில், நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவாகி, அவர் கதாநாயகியாக நடித்த ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்ட வெற்றி விழாவை கொண்டாடினர். இதில் படத்தின் முக்கிய குழுவினருடன், கதையாசிரியரும் சமந்தாவின் கணவருமான ராஜ் நிடிமோருவும் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய ராஜ் நிடிமோரு, ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மனதில் ஏற்கனவே ஒரு புதிய யோசனை உள்ளது. முதல் பாகத்தில் பணியாற்றிய அதே குழுவினர்தான் இரண்டாம் பாகத்திலும் இணைவார்கள். என் திரைப்பயணத்தில் முதல் முறையாக ஒரு படத்தின் தொடர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் முதல் பாகத்தைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ரசிகர்களுக்கு வழங்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
ராஜ் நிடிமோருவின் இந்த அறிவிப்பால், ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

