நடிகர் விஷ்ணு விஷால், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மனம் திறந்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவரது தோற்றத்தில் காணப்பட்ட சோர்வு குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்த நிலையில், அதற்கான காரணத்தை சமூக வலைத்தள பதிவின் மூலம் விளக்கியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய என்னுடைய பதிவுகளில் நீங்கள் தெரிவித்த ஒவ்வொரு கருத்தையும் நான் பார்த்தேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக நான் ஒரு ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவாகவே என் முகத்தில் சோர்வு தெரிகிறது. இருப்பினும், இந்த சிகிச்சை எனது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது,” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “‘கட்டா குஸ்தி 2’ படத்திற்காக இரவு பகலாக உழைத்த அனைவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும், ரசிகர்கள் அளிக்கும் அன்பும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன. உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்,” என்றும் கூறியுள்ளார்.
இறுதியாக, “எனது உடல்நிலை விரைவில் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்கள் காட்டிய அன்பும் அக்கறையும், என் உடல்நலத்தை இன்னும் சிறப்பாக கவனித்துக்கொள்ள என்னை ஊக்குவித்துள்ளது. தற்போது ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் இறுதிக்கட்ட புரமோஷன் பணிகளில் முழு கவனத்துடன் ஈடுபட்டு வருகிறோம். வரும் ஜூலை 3-ஆம் தேதி வெளியாகும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
Humbly sharing this with gratitude and love 🙏#GattaKusthi2 pic.twitter.com/FCR9n782RA
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) June 25, 2026

