Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘டாக்சிக்’ ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு!

“‘Toxic’ Release Postponed Again!”

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், மலையாள இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள Toxic: A Fairy Tale for Grownups திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1940 முதல் 1970 காலகட்டத்தில் கோவாவில் நடந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாஃபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, சுதேவ் நாயர், அக்ஷய் ஒபராய், ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதலில் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஜூன் 4க்கு மாற்றப்பட்டது. இதுவே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஜூன் மாத வெளியீடும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யாஷ் கூறியதாவது: “சில படங்கள் நம்மை சினிமாவை மீண்டும் காதலிக்க வைக்கும். ‘டாக்சிக்’ அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் கிடைத்த உலகளாவிய வரவேற்பு, இந்தப் படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.

படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வெளியீட்டு தேதியை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளோம். ஜூன் மாதத்தில் படம் வெளியாகாது. ஆனால் விரைவில் உலகளாவிய ஒருங்கிணைந்த தேதியில் வெளியாகும்.

இந்திய சினிமா உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை உயர்த்துவது நம் பொறுப்பு. சில கதைகள் பொறுமையை கேட்கும்… ‘டாக்சிக்’ அப்படிப்பட்ட ஒன்று. ரசிகர்களின் ஆதரவுடன், இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்” என்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ள ‘டாக்சிக்’ திரைப்படம், புதிய தேதியில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.