இந்தியாவின் ரா (RAW) உளவு அமைப்பில் பணியாற்றும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக ரஷ்ய ராணுவத்தால் கைது செய்யப்படுகிறார். அவருடன் அந்த ஆபத்தான மூலப்பொருளும் எதிரிகளின் கையில் சிக்கி, அதை பாகிஸ்தானுக்கு அனுப்பும் சதி திட்டம் உருவாகிறது.
இந்த ஆபத்தான சூழ்நிலையை சமாளிக்க, ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையில் ஒரு ரகசிய குழு செயல்படுகிறது. ஆனால் அவர்களின் முதல் முயற்சி தோல்வியடைகிறது. பின்னர், அவர் மற்றொரு திறமையான உளவாளியான ஆர்யாவுடன் இணைந்து, சரத்குமாரை மீட்டு, அந்த மூலப்பொருளை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர ஆபத்தான மிஷனில் ஈடுபடுகிறார்.
இந்த மிஷன் வெற்றி பெற்றதா? அந்த சர்வதேச சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆர்யா, தனது கம்பீரமான தோற்றம் மற்றும் உடல் மொழியால் ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை கவர்கிறார். சரத்குமார் நடித்த ‘மிஸ்டர் எக்ஸ்’ கதாபாத்திரம் வித்தியாசமானதாய் இருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு வலிமை பெறவில்லை. கௌதம் கார்த்திக் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய முயற்சி செய்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக அவர் காட்டிய முயற்சி கவனிக்கத்தக்கது. மஞ்சு வாரியர் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். அதுல்யா ரவி, அனகா, ரைசா வில்சன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இயக்குநர் மனு ஆனந்த், உளவாளிகள் உலகத்தை மையமாக கொண்டு ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் கதையை உருவாக்கியுள்ளார். முதல் பாதியில் சற்றே மெதுவாக நகரும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் வேகம் பிடிக்கிறது. ஹாலிவுட் தரத்தில் திரைக்கதை அமைக்க முயற்சி செய்திருப்பது தெரிகிறது. இருப்பினும் சில லாஜிக் குறைகள் கவனிக்கப்படுகின்றன.
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் காட்சிகளை தரமாக பதிவு செய்துள்ளார். லொக்கேஷன்கள் மற்றும் காட்சியமைப்புகள் பார்வைக்கு கவர்ச்சியாக அமைந்துள்ளன. திபு நினன் தாமஸ் பின்னணி இசை, காட்சிகளின் தீவிரத்தை உயர்த்துகிறது.
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, சண்டை காட்சிகளில் நடிகர்களை சிறப்பாக பயன்படுத்தி, படத்தின் ஆக்ஷன் அம்சத்தை வலுப்படுத்தியுள்ளார்.

