Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

Seeman to Star in Sivakarthikeyan’s Seyon

நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெற்று வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சீமான் விரைவில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘எல்ஐகே’ திரைப்படத்தில் சீமான் நடித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்குகிறார்.

மதுரை மண்ணின் பாரம்பரிய பின்னணியில் கிராமத்து கமர்ஷியல் எண்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கியமான சண்டைக் காட்சிகள் மற்றும் குடும்பக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘சேயோன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீமான் நடிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.