ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழு சார்பில் வெற்றி விழா நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகை பிரீத்தி முகுந்தன், “‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு சிறப்பான பயணமாக இருந்தது. இப்படத்தில் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு பார்வையாளராக நான் திரையரங்கின் நுழைவு வாயில் அருகே நின்றுகொண்டே படத்தை பார்த்தேன். அப்போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. படம் அந்த அளவுக்கு நன்றாக இருந்தது” என்றார்.
தொடர்ந்து பேசிய அசோக் செல்வன், “இந்தப் படம் அனைவருடனும் ஆழமாக இணைந்துள்ளது. படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். ‘அன்பில் அவன்’ படத்தை நான் செய்ததில் மிகவும் பெருமையாக இருக்கிறது.
“நான் வாய்ப்புக்காக சுமார் 200 ஆடிஷன்கள் வரை சென்றிருப்பேன். திறமையான நடிகர்களுக்கு ஏன் சரியான வாய்ப்பு கிடைப்பதில்லை என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அதனால் நான் தயாரிப்பாளராக மாறும்போது, அத்தகைய திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அது இந்தப் படத்தின் மூலம் சாத்தியமாகியுள்ளது.
காதலித்தவர்களுக்கும், காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கப் போகிறவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் பிடிக்கும்” என்றார்.
இதையடுத்து, ‘அன்பில் அவன்’ படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனக் காட்சியை அசோக் செல்வனும் பிரீத்தி முகுந்தனும் விழாவில் காமெடியாக நடித்துக் காட்டினர். “நிஜமாகவே உனக்கு என்னை பிடிக்குமா சூர்யா?” என பிரீத்தி கேட்க, அதற்கு அசோக் செல்வன், “இப்படி கேட்டால் எப்படி? அதை உணர்வுப்பூர்வமாக கேட்டால் நன்றாக இருக்கும்” என பதிலளித்தார். இருவரின் இந்த கலகலப்பான உரையாடல் விழாவில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

