Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“மக்கள்தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம்” – பொதுமக்களுக்கு இளையராஜா அழைப்பு

Population Census Is the Foundation of National Development – Ilaiyaraaja Urges Public to Participate

இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது குடும்ப விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, பொதுமக்களும் சுயமாக தங்களது தகவல்களை பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பலரும் இணையவழி சுயக் கணக்கெடுப்பில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “இசை மனிதர்களை ஒன்றிணைப்பதைப் போல, மக்கள்தொகை கணக்கெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2027-ம் ஆண்டு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும், 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறும் சுயக் கணக்கெடுப்பு (Self-Enumeration) காலத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் குடும்ப விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியலிடல் (House Listing Operation – HLO) கட்டத்தில் வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, “துல்லியமான மக்கள்தொகைத் தகவல்களே நாட்டின் திட்டமிடல், வள ஒதுக்கீடு மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாக அமைகின்றன. அனைவரும் ஒன்றிணைந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம்” என்று இளையராஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.