சமூக வலைத்தளங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பாதிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பேர் மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித் என்பவர், சமூக வலைத்தளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையிலான பதிவுகள் வெளியிடப்படுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், Instagram, YouTube உள்ளிட்ட தளங்களில் சிலர் இளம் வயதினரை பாதிக்கும் வகையில் ஆபாசமாக பேசி பதிவுகளை வெளியிட்டு வருவதாகவும், இதன்மூலம் பல லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் தொடர்ச்சியாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

