தமிழ்த் திரையுலகில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னணிப் பாடகி ஜனனி. ‘அசல்’ படத்தின் ‘தொட்டடெய்ங்’, ‘ஐயா’ படத்தின் ‘அதிரி பதிரி’, ‘பள்ளிக்கூடம்’ படத்தின் ‘இந்த நிமிடம்’, ‘பிறப்பு’ படத்தின் ‘உலக அழகி நான்தான்’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது கனடாவில் வசித்து வரும் ஜனனி, பின்னணிப் பாடகியாகத் தனது திறமையை நிரூபித்துள்ள நிலையில், அடுத்ததாக இசையமைப்புத் துறையிலும் களமிறங்கத் தயாராகியுள்ளார்.
இதன் தொடக்கமாக, டிவோ மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து தனது முதல் சுயாதீன இசைப் படைப்பை உருவாக்கி வருகிறார். இதன் மூலம் பாடகி என்ற அடையாளத்தைக் கடந்து, இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்த உள்ளார்.
இசையமைப்பாளர் பரத்வாஜின் இசைப் பாரம்பரியத்துடன் தனது தனித்துவமான இசை அணுகுமுறையையும் இணைத்து, புதிய இசைப் படைப்புகளை உருவாக்க ஜனனி திட்டமிட்டுள்ளார். அவரது இந்தப் புதிய முயற்சி இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனனியின் சுயாதீன இசைப் பயணம் குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

