கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ் பியூ தற்போது பகிர்ந்துள்ளார்.
சிலியன் மர்ஃபி கதாநாயகனாக நடித்த இப்படத்தில், ஃப்ளோரன்ஸ் பியூ ‘ஜீன் டாட்லாக்’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் இருவரும் இடம்பெறும் நிர்வாணக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கேமரா பழுதானதாக ஃப்ளோரன்ஸ் பியூ தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர், “நானும் சிலியன் மர்ஃபியும் ஆடைகள் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்த காட்சியின் நடுவில் திடீரென கேமரா வேலை செய்யவில்லை. அந்த நேரத்தில் மிகவும் சங்கடமான சூழல் உருவானது” என கூறியுள்ளார்.
அந்தக் காட்சி ‘Closed Set’ முறையில் படமாக்கப்பட்டதால், கேமரா சரிசெய்யப்படும் வரை இரு நடிகர்களும் தங்களது உடலை கைகளால் மறைத்தபடி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட மற்றொரு கேமராவும் ஏற்கனவே பழுதுபார்க்கும் மையத்தில் இருந்ததால், உடனடியாக மாற்று கேமராவை பயன்படுத்த முடியவில்லை. இதனால், பழுதடைந்த கேமராவை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் படப்பிடிப்பு அறைக்குள் வரவழைக்கப்பட்டுள்ளார்.
அந்தச் சூழலில் நிலவிய சங்கடமான அமைதியை தவிர்க்க நினைத்த ஃப்ளோரன்ஸ் பியூ, கேமரா தொழில்நுட்பம் குறித்து அந்த நிபுணரிடம் ஆர்வமாக கேள்விகள் கேட்கத் தொடங்கியுள்ளார். கேமராவின் ஷட்டரில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து அவர் கேட்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனும் அங்கு வந்து, கேமராவுக்குள் வெளிச்சம் தவறான முறையில் ஊடுருவியதே தொழில்நுட்பக் கோளாறுக்கு காரணம் என்பதை விளக்கியதாக ஃப்ளோரன்ஸ் பியூ கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை பகிர்ந்த அவர், ‘ஓபன்ஹைமர்’ படக்குழுவின் தொழில்நுட்ப அறிவையும் அர்ப்பணிப்பையும் வெகுவாக பாராட்டினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் சினிமா தொழில்நுட்பம் குறித்து ஆழமான அறிவு இருந்ததாகவும், அத்தகைய திறமையான குழுவுடன் பணியாற்றியது தனக்கு பெருமையான அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

