கேரளாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அம்மாநில அரசு புதியதாக ‘சாலை பாதுகாப்பு மிஷன்’ திட்டத்தைத் தொடங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் பிராண்ட் தூதராகப் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
கொச்சி டவுன்ஹாலில் வரும் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. விபத்தில்லா கேரளாவை உருவாக்கும் நோக்கில், பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்து விதிகளைத் தீவிரமாக அமல்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
‘தெளிவுபடுத்து மற்றும் செயல்படுத்து’ (Educate and Enforce) என்ற மையக்கருத்தின் அடிப்படையில் இந்த மிஷன் செயல்பட உள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் சுமார் 3,700 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகக் கூறப்படும் நிலையில், இந்த உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதேசமயம், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த மிஷனுக்கு கேரள முதல்வர் தலைவராகவும், போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜான் இணைத் தலைவராகவும் செயல்பட உள்ளனர். மேலும், எட்டு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்களாக இடம்பெற உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக மாவட்ட மற்றும் உள்ளாட்சி அளவுகளில் பாதுகாப்பான ஓட்டுநர் கழகங்கள் அமைக்கப்பட உள்ளன. விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து சீரமைத்தல், சாலைகளின் தரத்தை மேம்படுத்துதல், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் பிரத்யேகப் பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட உள்ளன.
சாலை விபத்துகளைக் குறைத்து, பாதுகாப்பான போக்குவரத்து நடைமுறைகளை உருவாக்குவதற்கான முக்கிய முயற்சியாக இந்த மிஷன் பார்க்கப்படுகிறது.

