‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஒன் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். துஷ்யந்த் கதாநாயகனாகவும், பிக் பாஸ் புகழ் ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இந்த விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், “‘ஆல் பாஸ்’ அற்புதமான படம். ஒவ்வொரு திரைப்படத்திலும் பணியாற்றும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரின் உழைப்பும் முக்கியமானது” என்றார்.
மேலும், “‘கருப்பு’ படத்தின் கிளைமாக்ஸில் நான் ஆடிய டான்ஸ் காட்சியை நீக்கிவிட்டார்கள். அதை யூட்யூபில் வெளியிடுவோம் என்றும் கூறி, அதையும் செய்யவில்லை. சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள்… அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள். நான் பல வருடங்களாக நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். எனக்கான நியாயம் கிடைக்க வேண்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறிய அவர், “எங்களைப் பற்றி தவறாக எழுதுவதும், பேசுவதும்தான் சிலருக்கு வேலையாக இருக்கிறது. நான் நல்லது செய்தாலும் அதை கொச்சைப்படுத்திப் பேசுகிறார்கள்” என வேதனை தெரிவித்தார்.
“சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும். யாருடைய உழைப்பையும் குறைத்து மதிப்பிடக்கூடாது. இது என்னுடைய ஊர், என்னுடைய வாழ்க்கை, என்னுடைய சினிமா” என்றும் மன்சூர் அலிகான் பேசினார்.

