வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் கடந்த 14-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், “இந்தக் காலத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து, அதைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது குறைந்து வருகிறது. ஒரு நிமிடத்திற்குமேல் யாரிடமும் பேச முடிவதில்லை. ஆனால், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழுவினர் அன்பு, பாசம் மற்றும் ஒரே சிந்தனையுடன் கதையை நிதானமாகச் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதைப் பற்றி பேசும்போதும், கேட்கும்போதும் பெருமையாக இருக்கிறது” என்றார்.
மேலும், இயக்குநர் வெங்கி அட்லூரி கதையை காட்சிக்கு காட்சி விவரித்தபோது, “இந்தக் காட்சிகளில் எல்லாம் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா?” என தான் கேட்டதாகக் கூறினார். பின்னர் கதாநாயகி தேர்வு குறித்து பேசிய ராதிகா, மமிதா பைஜுவை பார்த்தவுடன் அவர் இப்படத்திற்கு பொருத்தமானவர் என மகிழ்ந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து கமல்ஹாசனை சந்தித்துப் பேசியது குறித்தும் குறிப்பிட்ட ராதிகா, “புத்திசாலித்தனமாக எழுதுவது எப்படி என்பது குறித்து பயிற்சியும், விவாதமும் நடத்தப்பட வேண்டும்” என அவர் கூறியதாக தெரிவித்தார்.
“சினிமாவில் ஒவ்வொரு கதைக்கும் பின்னாலும் ஒரு குடும்பம் இருக்கும். அந்தக் குடும்பத்திற்குள் ஒரு பந்தம் இருக்கும். சில படங்களில் அந்தப் பந்தம் முழுமையாக வெளிப்படும். அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் ‘விஸ்வநாத் & சன்ஸ்’” என்றும் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.

