Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

Kannada Actor Raj B Shetty Joins Sivakarthikeyan’s Seyon

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்சே நடித்துள்ளார். மேலும் பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, மதுரையை பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் குடும்ப அம்சங்கள் கலந்த கிராமப்புற கதையாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மேலும், இப்படத்தை ஆயுத பூஜை அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கன்னட சினிமாவில் ‘ஒந்து மொட்டேய கதே’, ‘கருட கமனா விருஷப வாகன’, ‘டோபி’, ‘சுவாதி முத்தின மழ ஹனியே’ உள்ளிட்ட படங்கள் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ராஜ் பி. ஷெட்டி, தற்போது ‘சேயோன்’ படத்தில் இணைந்துள்ளார்.

நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டது. நெருப்புப் பின்னணியில் மிரட்டலான தோற்றத்தில் இடம்பெற்றுள்ள ராஜ் பி. ஷெட்டியின் போஸ்டர், அவர் படத்தில் வலுவான கதாபாத்திரம் அல்லது வில்லனாக நடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.