‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’. இப்படத்தை துல்கர் சல்மானே தயாரித்திருந்தார். சூதாட்டம், பந்தயம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் பின்னணியில், அதிர்ஷ்டத்தை நம்பி வாழும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருந்தது.
துல்கர் சல்மானுடன் இணைந்து கயாடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட் மற்றும் கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், துல்கர் சல்மானின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில், படத்தின் தோல்வி குறித்த விமர்சனங்களுக்கு துல்கர் சல்மான் பதிலளித்துள்ளார்.
படத்தின் தோல்வி குறித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவுக்குப் பதிலளித்த துல்கர் சல்மான், அந்தப் பதிவை முழுமையாகப் படித்ததாகவும், அதில் கூறப்பட்டிருந்த பல கருத்துகள் சரியானவை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “படக்குழுவினர் தங்களால் முடிந்த அனைத்தையும் சரியாகச் செய்தாலும், சில வெளிப்புறக் காரணிகளும் சூழல்களும் முடிவுகளைத் தலைகீழாக மாற்றிவிடக்கூடும். ஒரு திரைப்படத்தின் இறுதி வடிவத்தையும் அதன் வெற்றி, தோல்வியையும் பகுப்பாய்வு செய்வது எளிது. ஆனால், ஒரு திரைப்படத்தை உருவாக்க 200 முதல் 300 பேர் வரை உழைக்கிறார்கள். அது எளிதான காரியமல்ல.
திரைப்படம் உருவாக்குவதற்கு என்று நிலையான சூத்திரங்கள் எதுவும் கிடையாது. எந்தவொரு தயாரிப்பு நிறுவனமோ அல்லது நடிகரோ வேண்டுமென்றே மோசமான திரைப்படத்தை உருவாக்க நினைப்பதில்லை. நிஜ வாழ்க்கையில்கூட எல்லாமே நாம் நினைத்தபடி நடந்துவிடுவதில்லை.
பல குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படும் திரைப்படத் தயாரிப்பில் இதுபோன்ற சூழல்கள் ஏற்படலாம். நான் எப்போதும் என் குழுவின் பக்கமே நிற்பேன். யாரையாவது குறை சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், என்னைக் குறை சொல்லுங்கள்” என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
தனது படக்குழுவினருக்கு ஆதரவாகவும், படத்தின் தோல்விக்கான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் துல்கர் சல்மான் அளித்துள்ள இந்தப் பதில் கவனம் பெற்றுள்ளது.

