சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக, அந்த பேட்டியின் சில பகுதிகள் தனியாக வெட்டி பகிரப்பட்டதால், அவரது கருத்துகள் பல்வேறு விதமாக விமர்சிக்கப்பட்டன.
இந்த நிலையில், தன்னைச் சுற்றி பரவி வரும் சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் நடிகர் மகேந்திரன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது பேட்டியில் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், உண்மையில் தான் சொல்ல வந்த விஷயம் வேறு எனவும் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் பேசிய அவர், “சமீபத்தில் நான் அளித்த நேர்காணலில் இடம்பெற்ற ஒரு பகுதி அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்), யூடியூப் போன்ற தளங்களில் பலரும் அதைப் பற்றி பேசுவதைக் கண்டபோது வருத்தமாக இருந்தது. நான் மதிக்கும் சிலரும் என்னைப் பற்றி கருத்து தெரிவித்திருந்தனர். ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால், நான் உண்மையில் என்ன சொல்ல வந்தேன் என்பதை புரிந்திருக்கலாம்,” என்றார்.
மேலும், “நான் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று கூறவில்லை. வெகு சிலரிடம் மட்டுமே ஆறு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்குக் காரணம், ஆட்சிக்கு வந்த பிறகு நல்லாட்சி வழங்க ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்று முன்பே கூறப்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் பேசியிருந்தேன்,” என்று விளக்கமளித்தார்.
தனது பேட்டியில் இடம்பெற்ற “சோலார் சிஸ்டம்” குறித்த கருத்து பற்றியும் அவர் பேசியுள்ளார். “அந்த வார்த்தை தவறாக வந்தது உண்மை. நான் சொல்ல வந்தது சோலார் எனர்ஜி, சோலார் பவர் அல்லது சோலார் பேனல் பற்றிதான். சரியான வார்த்தையை அப்போது பயன்படுத்த முடியவில்லை. அதற்காக என்னை விமர்சித்தவர்கள் பலர் இருந்தனர்,” என்று அவர் கூறினார்.
அதேபோல், கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுமையாக சூரிய சக்தியில் இயங்கும் முறை குறித்து தனக்கு நீண்ட காலமாக ஆச்சரியம் இருப்பதாகவும், தமிழ்நாட்டிலும் அதுபோன்ற முயற்சிகள் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த கருத்தை தெரிவித்ததாகவும் மகேந்திரன் விளக்கம் அளித்தார்.
தன்னைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலளித்த அவர், “எனக்கு திமிர் அதிகம், இயக்குநர்களிடம் மரியாதையில்லாமல் நடந்துகொண்டேன் என்று சிலர் கூறினார்கள். ஆனால் அப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவும் நடந்ததில்லை. என்னைப் பற்றி கூறியவர்களிடமே நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதை வேடிக்கையாக சொன்னதாக தெரிவித்தார்கள்,” என்றார்.
மேலும், “மக்கள் கஷ்டப்படும்போது நான் அதை ரசிப்பவன் போல ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டாம். இன்று நான் இருக்கும் இடத்திற்கும், நான் உண்ணும் உணவிற்கும் காரணம் மக்கள் தான். அவர்களை நான் ஒருபோதும் அவமதிக்க மாட்டேன். என் நடிப்பு அல்லது என் படங்கள் குறித்து விமர்சனம் செய்யலாம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்வேன். ஆனால் நான் சொல்லாத விஷயங்களை என்னிடம் இணைத்து பேச வேண்டாம்,” என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, “என்னுடைய கருத்துகளால் யாருக்காவது மனவேதனை ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். தேவைப்பட்டால் மன்னிப்பும் கேட்கிறேன். இந்த சூழலில் என்னை தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,” என்று மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விளக்க வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் இது குறித்து கலவையான கருத்துகள் பதிவாகி வருகின்றன.
View this post on Instagram

