Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

Harshath Khan’s Hilarious Neem Leaf Costume Story Leaves ‘Meesaya Murukku 2’ Heroines in Splits!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஜெ ஆச்சார், ஹர்சத் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குஷ்பு சுந்தர் மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ள இப்படம் வரும் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஹர்சத் கான் பேசிய நகைச்சுவையான சம்பவம் அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அவர் பேசுகையில், படத்தில் இடம்பெறும் முக்கியமான காமெடி காட்சி ஒன்றின் பின்னணியில் நடந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். பழங்காலத்தில் மனிதர்கள் இலைகளை அணிந்து வாழ்ந்ததைப் போன்று, தானும் ஹிப் ஹாப் ஆதியும் தலை மற்றும் உடலில் பச்சை இலைகளை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டிய காட்சி இருந்ததாக தெரிவித்தார்.

படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றபோதுதான் அந்த காட்சிக்கான ‘காஸ்ட்யூம்’ இலைகள் என்பது தனக்குத் தெரியவந்ததாக கூறிய ஹர்சத் கான், டவுசர் ஏதாவது தருவார்களா என கேட்டபோது, முழுவதும் இலைகளை மட்டுமே அணிய வேண்டும் என படக்குழுவினர் கூறியதாக தெரிவித்தார்.

ஆதி இதற்கு மறுப்பு தெரிவிப்பார் என நினைத்த நிலையில், அவர் ஏற்கனவே இலைகளை அணிந்துகொண்டு தயாராக நின்றதைப் பார்த்து தானும் வேறு வழியின்றி இலைகளை கட்டிக்கொண்டதாக ஹர்சத் கான் கூறினார்.

அப்போது காற்று வீசியதில் தான் கட்டியிருந்த இலைகள் பறந்துவிட்டதாகவும், பின்னர் அறைக்குள் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி, “அண்ணே, வர முடியல… நீங்க கொஞ்சம் வாங்க” என ஆதியிடம் உதவி கேட்டதாகவும் அவர் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து, ஆதியிடம் இருந்து இரண்டு இலைகளை வாங்கி தனது ஆடையை சரிசெய்துகொண்டதாகவும், இருவரும் அந்தக் கோலத்தில் நடந்து சென்றபோது அனைவரும் தங்களை நேருக்கு நேர் பார்ப்பதைவிட பின்னால் பார்த்ததாகவும் கூறினார்.

இந்த சம்பவத்தை விவரித்த ஹர்சத் கான், “நான் வேண்டிக்கொண்டதெல்லாம் படத்தின் கதாநாயகிகள் கெட்டிகா, சைத்ரா, ரம்யா ஆகியோர் அந்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதுதான். நல்லவேளையாக அவர்கள் வரவில்லை” எனக் கூறினார்.

ஹர்சத் கான் இவ்வாறு பேசியதும் மேடையில் இருந்த கெட்டிகா ஷர்மா, சைத்ரா ஜெ ஆச்சார் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் வெட்கத்தில் குலுங்கி சிரித்தனர். இதனால் பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும் கலகலப்பாக மாறியது.