தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘#PocketNovel’ (பாக்கெட் நாவல்). ‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், அடுத்ததாக இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். தியாகராஜன் குமாரராஜா – ஜி.வி. பிரகாஷ் குமார் கூட்டணி முதன்முறையாக இணைவதால், படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ராஜ் பி. ஷெட்டி மற்றும் கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதி ‘ஷில்பா’ என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது வென்றார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

