இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, சபீர், அசோக் செல்வன், கலையரசன், ஃபகத் ஃபாசில், லிங்கேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், நடிகை சோபிதா துலிபாலாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் மேக்கிங் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில், ‘வேட்டுவம்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித் புதிய போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


