கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் தாகத்தை தணிக்க, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சிறப்பான சமூக சேவை முன்னெடுக்கப்பட்டது. சென்னை பிரசாத் லேப் வளாகம் அருகிலுள்ள அருணாச்சலம் சாலையில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான Cheran மற்றும் நடிகை Athulya Ravi சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர். நிகழ்வில் சங்கத் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய சேரன், “கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இத்தகைய சூழலில், தாகத்தால் தவிக்கும் மக்களுக்கு உதவியாக இந்த நீர் மோர் பந்தலை அமைத்துள்ள சங்கத்தின் முயற்சி பாராட்டுக்குரியது. இன்று மட்டும் ஆயிரம் பேருக்கு நீர் மோர் வழங்கியுள்ளார்கள். இந்த சேவை தொடர்ந்து நடைபெறும் என்பதும் மகிழ்ச்சிகரமானது,” என்றார்.
நடிகை அதுல்யா ரவி பேசுகையில், “தமிழ் புத்தாண்டு நாளில் இவ்வளவு நல்ல முயற்சியை தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கோடை காலத்தில் நடந்து செல்லும் மக்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். நல்ல எண்ணத்துடன் தொடங்கிய இந்த சேவை பலருக்கு பயன்பட வேண்டும்,” எனக் கூறினார்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, வெப்ப அலைக்காலத்தில் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.


