Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்: படக்குழுவின் அதிரடி அறிவிப்பு

Ajith’s Gladiators Trailer to Premiere in Select Theatres Across Tamil Nadu & Puducherry

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

சினிமாவைத் தாண்டி கார் பந்தயத்திலும் ஆர்வம் கொண்ட அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். தனது ‘அஜித்குமார் ரேசிங்’ அணியின் மூலம் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

அஜித்தின் இந்த சர்வதேச ரேசிங் பயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ (Gladiators – In Pursuit of Challenges). இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளிலும், ஐரோப்பாவில் நடைபெற்ற Asian Le Mans மற்றும் 24H Series தொடர்களிலும் அஜித் பங்கேற்ற முக்கிய தருணங்கள் இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற நிகழ்வில் அஜித்துக்கு ‘ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது’ வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் சிறப்பு டிரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரசிகர்களுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வு செய்யப்பட்ட முக்கிய திரையரங்குகளில் இந்த டிரெய்லர் திரையிடப்பட உள்ளது.

3 நிமிடங்களுக்கு மேலான நீளம் கொண்ட இந்த டிரெய்லருக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A 13 சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதனிடையே, ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ‘டேர்டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரித்து வருகிறார்.