‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர், தற்போது வெளியாகியுள்ள ‘இம்மார்ட்டல்’ மற்றும் துல்கர் சல்மானுடன் நடித்துள்ள ‘ஐ ஆம் கேம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த வாரம் முதல் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் கதாநாயகியான கயாடு லோகர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காதது பேசுபொருளானது. இதனால், ‘இம்மார்ட்டல்’ படத்திற்கு அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லையா? என்ற கேள்விகளும் எழுந்தன.
இதுகுறித்து விளக்கம் அளித்த கயாடு லோகர், “ஏன் இதைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர் என்று எனக்குத் தெரியவில்லை. ‘ஐ ஆம் கேம்’ படத்தின் புரமோஷனுக்காக எனக்கு ஒரு நாள் மட்டுமே கிடைத்தது. ஆனால், அந்த தேதியில் ‘இம்மார்ட்டல்’ படக்குழுவினரால் நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.
அதன்பிறகு மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றேன். இதனால் ‘இம்மார்ட்டல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. ஒரு படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன், மற்றொரு படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது போல சித்தரித்து விமர்சனங்கள் வருகின்றன. பரவாயில்லை, இதுபோன்ற விமர்சனங்களுக்கு நான் பழகிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

