கேரளாவைச் சேர்ந்த திருநங்கை நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞரான தீப்தி கல்யாணி, தனது தனித்துவமான தோற்றம் மற்றும் கலைத்திறமையால் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். சினிமா நிகழ்ச்சிகள், கடைத் திறப்பு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர், சமூக வலைதளங்களிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
முன்னதாக, மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தோற்றத்தைப் போல அலங்கரித்து அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் தோற்றத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தீப்தி கல்யாணி மீண்டும் கவனம் ஈர்த்து வருகிறார். குறிப்பாக, ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாரா அணிந்திருக்கும் அம்மன் வேடத்தைப் போன்ற தோற்றத்தில், கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் அவர் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுமட்டுமின்றி, நயன்தாராவின் பிரபலமான ஆடை அலங்காரங்களைப் போலவே உடையணிந்து கடைத் திறப்பு விழாக்களிலும் தீப்தி கல்யாணி பங்கேற்று வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

