Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்… நெகிழ்ந்த ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

Sivakarthikeyan’s Surprise Gift Leaves Parking Director Ramkumar Balakrishnan Touched

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்குப் பரிசளித்த புகைப்படங்களை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகார்த்திகேயன் அண்ணாவிடமிருந்து அன்பான இன்ப அதிர்ச்சி கிடைத்தது. இந்த அழகான பரிசுக்கு மிக்க நன்றி அண்ணா. இது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள ஒன்று” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இப்படம் 71-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், சிவகார்த்திகேயனுடன் அவர் முதன்முறையாக இணையும் திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டிராகன்’, ‘இம்மார்டல்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த காயடு லோஹர் நடிக்கிறார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர்கள் சுதாகர், வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் இணைந்துள்ளனர். மேலும், ஜார்ஜ் மரியன், பப்லு பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, ‘அமரன்’ படத்தில் பணியாற்றிய கலைவாணன் படத்தொகுப்பு செய்கிறார். பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராகவும், ஸ்டீவன் குமார் சண்டைக் காட்சி இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.

கடந்த செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘SK27’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.