இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்பயணத்துடன் இணைந்த மறக்க முடியாத பாடல்கள், கதைகள் மற்றும் ரசிகர்களின் நினைவுகளை ஒரே மேடையில் கொண்டுவரும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடைபெற்ற ‘ஒன்றா ரெண்டா’ நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் அடுத்த கட்டமாக மலேசியாவில் பிரம்மாண்டமாக நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இடம்பெற்ற ரசிகர்களின் விருப்பமான பாடல்கள் மற்றும் அவரது படங்களுடன் தொடர்புடைய நினைவுகளை மையமாகக் கொண்டு, ஒரு இசைப் பயணமாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் முன்னணி பாடகர்களான கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், பிளாஸ், சைந்தவி, பால் டப்பா, சத்ய பிரகாஷ் மற்றும் ஹரிப்ரியா ஆகியோர் நேரலையில் பங்கேற்று கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படப் பாடல்களைப் பாட உள்ளனர்.
மேலும், இசைக்கலைஞர்களான கேபா ஜெரமையா, லலித் தல்லூரி, மனோஜ் குமார், கீத் பீட்டர்ஸ் மற்றும் புவனேஷ் நாராயணன் ஆகியோரும் இந்த இசைக் கொண்டாட்டத்தில் இணைந்து தங்களது பங்களிப்பை வழங்க உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்த நிலையில், தற்போது கோலாலம்பூர் நிகழ்ச்சியையும் அதே உற்சாகத்துடனும் பிரம்மாண்டத்துடனும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

