Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இரட்டை குழந்தைக்கு தந்தையானார் நடிகர் கவின்..!

Actor Kavin Becomes Father to Twins

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் கவின், தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். கவின் – மோனிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கவின், பின்னர் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன்பின் ‘நட்புனா என்ன தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், ‘பிக்பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

தொடர்ந்து ‘லிஃப்ட்’, ‘டாடா’, ‘ஸ்டார்’, ‘கிஸ்’, ‘ப்ளடி பெக்கர்’ உள்ளிட்ட படங்களில் நடித்த கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து, இயக்குநர் ராம் சங்கையா இயக்கும் புதிய படத்திலும் கவின் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த கிராமத்து பின்னணியிலான படத்தில், நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த நிலையில், தனது குடும்பத்தில் இணைந்துள்ள புதிய வரவுகளை கவின் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

“எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி. எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கவின் – மோனிகா தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை நடிகர் கவின் 2023 ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்போது இரட்டை குழந்தைகளின் வருகையால் அவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியுள்ளது.