காதலித்து திருமணம் செய்த மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கான காரணத்தையும் பின்னணியில் இருக்கும் கொலையாளியையும் கணவன் தேடும் கதைக்களத்தில் உருவாகி வருகிறது புதிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘கருப்பட்டி’.
கொளத்தூர் கிராமத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார் கதையின் நாயகன் கருப்பட்டி. அதே ஊரில் தந்தையுடன் வசிக்கும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி, பின்னர் அவரையே திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பவானி மர்மமான முறையில் உயிரிழக்கிறார்.
அதன் பிறகு பவானியின் ஆவி ஊரில் உள்ளவர்களை அச்சுறுத்தத் தொடங்குகிறது. இதையடுத்து, தனது மனைவியின் மரணத்திற்கான காரணத்தையும், அவரை கொலை செய்தது யார் என்பதையும் கண்டுபிடிக்க கருப்பட்டி முயற்சி செய்கிறார். இந்த தேடலில் அவருக்கு பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நேர்கின்றன. தொடர்ந்து நடைபெறும் மர்மம் மற்றும் திகில் நிறைந்த சம்பவங்களே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன.
மோனிதா மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விஜயராஜ், சமந்து, ஹரிணிதா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சேலம், மேட்டூர், செஞ்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. செந்தில் மாறன் மற்றும் கவிநாதன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். டி.எஸ். திவாகர் இசையமைப்பதுடன் படத்தொகுப்பையும் கவனிக்கிறார். ஹிஜாஸ் அகமது பாடல்களை எழுதியுள்ளார். ராம் முருகேஷ் நடனப் பயிற்சியையும், ரமேஷ் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.
‘காதல்பதிவு’, ‘நந்திவரம்’, ‘சினிமா கனவுகள்’, ‘கொலை தூரம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம், ‘கருப்பட்டி’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி இயக்கி வருகிறார். இது அவரது ஐந்தாவது திரைப்படமாகும்.
கதையின் நாயகனாக கருப்பட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜயராஜ், தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரித்து வருகிறார்.
காதல், மர்மம், திகில் மற்றும் ஆக்ஷன் என பல அம்சங்களுடன் உருவாகி வரும் ‘கருப்பட்டி’, ரசிகர்களுக்கு வித்தியாசமான த்ரில்லர் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


