தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’, அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்குகிறது.
ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் விஜய், சிறைக்குள் நடக்கவிருந்த பெரிய சதியை முறியடிக்கிறார். இதன் மூலம் நேர்மையான போலீஸ் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனனின் நம்பிக்கையை பெறுகிறார். ஆனால் விஜய்க்கு ஆதரவாக இருந்ததற்காக கௌதம் மேனன் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகி, பின்னர் விபத்தில் உயிரிழக்கிறார்.
இறப்பதற்கு முன் தனது மகள் மமிதா பைஜூவை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துகிறார். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் விஜய், அவருக்கு பயிற்சி அளித்து ராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கிறார்.
இதற்கிடையில், ஆப்பிரிக்காவில் கொடூர தாக்குதல்களை நடத்தி அச்சுறுத்தலாக விளங்கும் பாபி தியோல், இந்தியாவுக்குள் ஊடுருவி மிகப்பெரிய சதி திட்டத்தை செயல்படுத்த முயல்கிறார். அந்த திட்டத்தில் தெரியாமலே சிக்கிக் கொள்கிறார் மமிதா பைஜூ. அவரைக் கொல்ல பாபி தியோல் முடிவு செய்ததும், மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார் விஜய்.
பாபி தியோல் யார்? விஜய்க்கும் அவருக்கும் இடையேயான பகை என்ன? இந்தியாவை குறிவைத்து அவர் தீட்டும் சதி என்ன? அதை விஜய் முறியடிக்கிறாரா? என்பதற்கான பதில்களே படத்தின் பரபரப்பான இரண்டாம் பாதை.
நடிகராக விஜய் முழுப் படத்தையும் தனது தோள்களில் சுமக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டுவதோடு, உணர்ச்சிகரமான தருணங்களிலும் சிறப்பாக நடித்து கவர்கிறார். குறிப்பாக மகளிடம் பாசம் காட்டும் காட்சிகளும், எதிரிகளை எதிர்கொள்ளும் ஆக்ரோஷமும் கைதட்ட வைக்கின்றன. நடனக் காட்சிகளிலும் வழக்கம்போல் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன், நேர்மையான ஜெயில் அதிகாரியாக கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பூஜா ஹெக்டே அழகான தோற்றத்துடன் காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். மமிதா பைஜூ தனது துறுதுறு நடிப்பால் மனதில் நிற்கிறார். வில்லனாக பாபி தியோல் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரியாமணி, சுனில், பிரகாஷ் ராஜ், கஜராஜ் உள்ளிட்டோரின் பங்களிப்பும் கதைக்கு பலம் சேர்க்கிறது.
அனிருத் இசை படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. பின்னணி இசை பல காட்சிகளுக்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது. ‘தளபதி கச்சேரி’, ‘ராவண மவண்டா’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கொண்டாட வைக்கின்றன.
இயக்குநர் எச். வினோத், விஜய் என்ற மாஸ் ஹீரோவை முழுமையாக பயன்படுத்தி அதிரடியான திரைக்கதையை அமைத்துள்ளார். இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில், ‘ஜன நாயகன்’ விஜய் ரசிகர்களுக்கு முழுமையான மாஸ் விருந்து. ஆக்ஷன், உணர்வு, இசை, ரசிகர்களுக்கான கொண்டாட்ட தருணங்கள் என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் என்டர்டெய்னராக படம் வெற்றி பெறுகிறது.

